ஐதராபாத்:

‘‘இந்தியாவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு புதிய கொள்கை வெளியிட திட்டமிட் டுள்ளது’’ என்று விமான போக்குவரத்து துறை செயலாளர் சவுபே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் மேலும் கூறுகையில்,‘‘ இந்த கொள்கை வெளியான பிறகு ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதை தீவிரமாக கண்காணிக்க இலக்கு படை அமைக்கப்படும். இதற்கு கடந்த ஒரு ஆண்டாக பாதுகாப்பு முகமைகள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் கொள்கை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்பாடு குறித்து கொள்கையில் இடம்பெற்றிருக்கும். வழக்கமாக அமைச்சகம் உற்பத்தியில் கவனம் செலுத்துவது கிடையாது. ஆனால் இந்த விஷயத்தில் வல்லுனர்களை கொண்ட இலக்குபடை அமைக்கப்பட்டு உள்ளூர் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படும்’’ என்றார்.

தரையில் இருந்து 200 அடி உயரத்திற்கு மட்டுமே ஆளில்லா விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் வரைவு கொள்கையில் குறிப்பிட்டிருந்தது. சர்வதேச அளவில் உள்ளது போல் 400 அடி உயரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.