டில்லி

நாளை மறுநாள் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.  மக்கள் அங்கிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்து உள்ளனர்.  நெரிசல் மற்றும் விமானத்தில் தொற்றிக் கொண்டு பயணம் செய்வதால் உயிரிழப்பு நேரிடுகிறது.  ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.

மத்திய அரசு இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நாளை மறுநாள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானின் தற்போதைய நிலவரம் மற்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் இது குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த கருத்துக்களின் அடிப்படையில் ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.