டில்லி

கொரோனா வைரஸ் தாக்கம் எல்லை மீறிய நிலையில் மத்திய அரசு இன்று வெண்டிலேட்டர்கள் மற்றும் சானிடைசர்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் தினசரி நூற்றுக் கணக்கானோர் பாதித்து வருகின்றனர்.   இதைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   நாட்டில் பல மாநிலங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.  கடந்த சில மாதங்களாகப்  பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.

அவற்றில் முக்கியமான ஒன்று சானிடைசர்கள் எனப்படும் கை சுத்திகரிப்பானை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.  மற்றொன்று மூச்சுத் திணறல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் தற்போது சுத்திகரிப்பான் எனப்படும் சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.   அப்படி இருந்தாலும் அதுவும் கிடைக்காத நிலை உள்ளது.  இந்நிலையில் இன்று அதாவது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 அன்று மத்திய பாஜக அரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் மூச்சுத் திணறல் உள்ளோருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர்கள் மற்றும் அனைத்து உபகரணங்களும் சானிடைசர் எனப்படும் சுத்திகரிப்பானும் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை இரண்டும் கடந்த சில மாதங்களாக நாட்டில் அத்தியாவசிய தேவையாக இருந்த போது இவ்வளவு தாமதமாக ஏற்றுமதி தடையை மோடி அரசு அறிவித்தது குறித்து ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.