டில்லி,
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக  நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக  11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி உதவி பெற்று, தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் வந்த நிலையில் நேற்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி விவரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் விவரம் குறித்தும், அது செயல்படுத்தும் விதம் குறித்தும் விவரம் கேட்டிருந்தது.

இதையடுத்து, பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் பதிவை புதுப்பிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, பதிவை புதுப்பிக்க தவறியதால், வெளிநாட்டு நன்கொடை நிதி உதவி பெறும் 11,319 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு நேற்று அதிரடியாக ரத்து செய்தது.
இதன் மூலம் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி பெற்று கொண்டு, மத்திய அரசு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும், மதமாற்றங்களுக்கும்  அவற்றை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இவற்றிற்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 1975ம் ஆண்டு முதல் 77ம் ஆண்டுவரை அவசர நிலை அமலில் இருந்த போது, தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதியுதவி வந்தது.
இதை கட்டுப்படுத்த வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம்(எப்சிஆர்ஏ) கடந்த 1976ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் தொண்டு நிறுவனங்களுக்கு நிரந்தர பதிவு வழங்கப்பட்டது.
தொண்டு நிறுவனங்கள்,  5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்தது.
ஆனால், பதிவை புதுப்பிக்க கடந்த ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு கெடு விதித்திருந்தது.
அதன்படி பதிவை புதுப்பிக்க விண்ணப்பிக்காத 11 ஆயிரத்து 319 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.
இந்தப் பட்டியலில் சுமார் 50 அனாதை இல்லங்களும், நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களும், தெருவோர குழந்தைகளின் நலன்களுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனங்களும் உள்ளன.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த தொண்டு நிறுவனங்கள், இனி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.
பதிவை புதுப்பிக்க போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாத 1,736 தொண்டு நிறுவனங்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
images
இதில் ராமகிருஷ்ணா மிஷன், அமிர்தானந்தமயி மடம், கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை போன்ற பிரபல அமைப்புகளின் கிளைகளும் அடங்கியுள்ளன.
இந்த அமைப்புகள் கடந்த ஜூன் 30ம் தேதி க்கு முன்பே தங்கள் பதிவை புதுப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தன. இந்நிறுவனங்கள் வரும் 8ம் தேதிக்குள் பதிவை புதுப்பிக்க தேவையான ஆவணங்களை இ-மெயில் மூலம் அனுப்பும்படி உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாக தங்களின் வருவாயை கணக்கு காட்டாத சுமார் 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.
கடந்த 2010ம் ஆண்டில் வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 500 ஆக இருந்தது. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை தற்போது 20,500 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2010ல் காங்கிரஸ் கூட்டணி அரசு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்தது.
2010ல் இந்தியாவில் 42,500 தொண்டு நிறுவனங்கள் இருந்தன.
2015ல் பா.ஜனதா அரசு முதன்முறையாக 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமையை ரத்துசெய்தது.
2016ல் நவம்பர் 1க்குள் பதிவை புதுப்பிக்க விண்ணப்பிக்காத 11,319 தொண்டு நிறுவனங்களின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள என்ஜிஓக்களில் தெருவோர குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வந்த அனாதை இல்லங்கள், பள்ளிகள் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 50க்கும் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான நடவடிகைய மத்திய அரசின்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகம் எடுத்துள்ளது.