மத்திய அரசு, மாநில அரசை கையேந்த வைக்கிறது – அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்

Must read

கன்னியாகுமரி :
த்திய அரசு பல்வேறு துறைகளை கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மீனவ மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதில், தமிழக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, “சின்னமுட்டம் மீன்பிடு துறைமுகம் விரிவாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கப்படும். குமரி மாவட்டத்தில் கடலில் இருந்து மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் விரைவில் அமைக்கப்படும்.

மீனவர்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமையிலும், மீனவர்களின் உரிமையிலும் தலையிடாதவாறு திட்டங்களை கொண்டுவர தமிழக அரசு உறுதியாக உள்ளது. எந்த திட்டம் வந்தாலும் மீனவர்களை காக்க எப்போதும் அவர்களோடு தமிழக அரசு துணை நிற்கும்.

கல்வி, உணவு, மின்சாரம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பல்வேறு துறைகளை மத்திய அரசு கையில் வைத்து கொண்டு, மாநில அரசை கையேந்தி நிற்க வைக்க வேண்டும் என்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பேரிடர் காலங்களில் உடனடியாக கரை திரும்ப தொலைத் தொடர்பிற்கு அதிநவீன கருவிகள் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

More articles

Latest article