சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

திருச்சி உள்ள டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகளுக்கு இடையே  கடந்த மாதம் பெய்த மழை காரணமாக, ஏராளமான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.  மேலும் ஏற்கனவே அறுவடை செய்து திறந்த வெளியில், நெகழி உறையால் மூடப்பட்ட நெல்களும் ஈரத்தில் உள்ளன. காற்றின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளதால் நெல் மணிகள் பெரும்பாலும் கூடுதல் ஈரப்பதத்துடன் உள்ளது. 19 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல் மணிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

. இதையடுத்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய, வாணிபக் கழகத்திற்கு உத்தரவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இம்மாதம், 5ம் தேதி கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், மத்திய உணவு துறை அதிகாரிகளை டில்லியில், 15ம் தேதி சந்தித்து, ஈரப்பத அளவை அதிகரிக்கும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20 சதவிகிதம் வரை   ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, வாணிபக் கழகத்திற்கு அனுமதி அளித்து, மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை, தமிழ்நாட்டில் மட்டுமே பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.