டில்லி:

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு தடை செய்தது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக மாட்டு இறைச்சிக்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன. மாட்டு இறைச்சி கொண்டு சென்றவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்தது.

குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இந்த வன்முறை தாக்குதலுக்கு ஆளாகினர். பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. வடகிழக்கு மாநிலங்களில் பிரத்யேக உணவாக மாட்டு இறைச்சி உள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த பாஜக.வினரும் சட்டத்திற்கு எதிராக குரல் கொடக்க தொடங்கினர். இதையடுத்து மாட்டு இறைச்சிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் இச்சட்டத்தில் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இதற்காக விலங்கு துன்புறுத்தல் பாதுகாப்பு சட்டத்தில் விலங்கு சந்தை விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத் திருத்தத்தில் இருந்து ‘இறைச்சிக்காக’ என்ற வார்த்தையை அகற்றி மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத்துக்கான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சந்தைகளில் விலங்குகள் நலம் நிர்வகித்தல் என்று மாற்றப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் படி இறைச்சிக்காக விற்பனை செய்ய எந்த ஒரு நபரும் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில், பயன்பாட்டிற்கு தகுதியற்ற மற்றும் இளைய கால்நடைகளை விலங்கு சந்தையில் விற்பனை செய்யலாம் என்ற ரீதியில் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படவில்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.