டில்லி

ந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை என மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.   போதுமான அளவு நிலக்கரி இல்லாததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.  மேலும் இது அதிகரிக்கும் எனவும் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.  ஆனால் மத்திய அரசு நிலக்கரி பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தது.

தற்போது மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.  கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி 73 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த தினசரி நிலக்கரி இருப்பு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று 85 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையைச் சமாளிக்கக் கோல் இந்தியா நிறுவனம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அளிக்கும் தினசரி நிலக்கரி விநியோகத்தை 20% அதிகரித்துள்ளது.  விரைவில் இது மேலும் அதிகரிக்கப்படும்..  சென்ற ஆண்டு இந்த காலகட்டத்தில் 1.26 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த விநியோகம் தற்போது 1.50 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஓரிரு நாட்களில் இது 1.70 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட உள்ளது.  மேலும் நவம்பர் மாதம் குளிர்காலம் தொடங்குவதால் மின்சாரத் தேவை வெகுவாக குறையும்.    அதே வேளையில் நிலக்கரி இருப்பும் மேலும் அதிகரிக்கும்.  எனவே இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.