டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்துக்கு மனைவி மற்றும் அதிகாரிகளுடன்  முப்படை தளபதி  பிபின் ராவத் சென்ற  ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி வனப்பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 13 பேரின்  உடல்களும்,  நேற்று  இரவு டெல்லி கொண்டு வரப்படடது.  பாலம் விமானப்படைத் தளத்தை வந்தடைந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு நேற்று இரவு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு உள்ளது.  பிபின் ராவத் உள்ளிட்ட 13  ராணுவ அதிகாரிகளின் உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் இறுதி ஊர்வலம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.அதன்பின், ராவத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு டெல்லி கன்டோன் மென்டில் உள்ள மயானத்தில்  தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.