டெல்லி: கட்டண முறைகேடு சர்ச்சை தொடர்பாக பிரபல வாடகை கார், ஆட்டோ சேவை நிறுவனங்களான ஓலா, உபர் நிறுவனங்களுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பேசி செயலி மூலம் வாடகைக் கார், ஆட்டோ பயன்படுத்தும் சேவையை ஓலா, உபர் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. சமீப காலமாக ரேபிடோ நிறுவனமும் இத்துறையில் கால் பதித்துள்ளது.
இந்த நிறுவனங்களில், கைப்பேசி செயலிகள் மூலம் செயல்படும் வாடகை கார், ஆட்டோ புக் செய்பவர்களுக்கு இடையே கட்டண முறைகேடு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
அதாவது, ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் ஐபோன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதாவது ஆப்பிள் போன் விலை அதிகம் என்பதால், அதை வைத்திருப்பவர்கள், பணக்காரர்களாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் ஐபோன் மூலம் வாடகை கார் புக் செய்பவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஏராளமான புகார்களும் பதிவாகி உள்ளன.
இதைத்தொடர்ந்து, வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் ஆகியவற்றுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இத்தகவலை மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உறுதிப்படுத்தியுள்ளார். ‘இந்தியாவில் நுகர்வோரைச் சுரண்டும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அதனை அரசு சகித்துக்கொள்ளாது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்’ என்று ஜோஷி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டண விவகாரம் தொடா்பான குற்றச்சாட்டுக்கு ஓலா நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.