டெல்லி:
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு, மற்றும் மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளதால், தேர்வுகளை நடத்த பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையில், இந்த சூழலில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என்றும், மாநில தேர்வுகளை போல சிபிஎஸ்இ தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என ஒரு மாணவரின் பெற்றோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின் போது, மீதமுள்ள தாள்களுக்கான தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் மத்திய கல்வி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்..
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை என்று அறிவுறுத்தி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அனைத்து சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.