நாமக்கல்,

திமுக முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏவுமான பழனியப்பனுக்கு, தமிழக சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த தமிழக சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் தற்கொலை வழக்கில் , முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன்  அளித்துள்ளனர். இன்று நண்பகல் 12.30 மணிக்கு நாமக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்கள் கண்காணிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஒப்பந்ததாரர் சுப்பிரமணியனும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், சுப்ரமணியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து அவரது தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க அம்மா அணி எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எம்.எல்.ஏ-யான பழனியப்பன், எடப்பாடி அணிக்கு எதிராக,  தற்போது டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.