டில்லி

ராகேஷ் அஸ்தானா வழக்கு விவரங்களை தங்கள் வழக்கறிஞர்களிடமும் சிபிஐ பகிர்ந்துக் கொள்ளாததற்கு டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குனராக பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா மீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்தது.   அதை ஒட்டி அவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கை நீதிபதி முக்தா குப்தா விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து சிபிஐ அளித்த ரகசிய அறிக்கையை நீதிபதி மட்டுமே பார்வை இட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.   இது குறித்த விவரம் ஏதும் சிபிஐ சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு தெரியவில்லை.   அதனால் நீதிபதிக்கு எவ்வித விளக்கமும் அவரால் அளிக்க முடியவில்லை.

இது குறித்து நீதிபதி முக்தா குப்தா, ”சிபிஐ அளித்த அறிக்கையின் விவரங்கள் அந்த அமைப்பின் வழக்கறிஞர்களுக்கே தெரியவில்லை.   சிபிஐ தனது வழக்கறிஞர் மீது கூட நம்பிக்கை வைக்காதது துரதிருஷ்டமானது .    வழக்கறிஞரே படிக்கக் கூடாத ஆவணத்தை நான் ஏன் படிக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் விக்ரம்ஜித் பானர்ஜி, “அந்த ஆவணத்தில் உள்ளது மிகவும் ரகசியமானது என்பதால் யாருக்கும் காட்டப்படவில்லை.  எனவே நீதிபதி மட்டுமே இதை படிக்கவேண்டும்” என பதிலளித்தார்.   அதை மறுத்த நீதிபதி, இந்த வழக்கை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை 10 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மேலும் நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.