மும்பை:

தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி பெற்றதில் விதிமுறையை மீறியதாக மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிஐ இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆனந்த் க்ரோவர் வழக்கறிஞர்களை ஒன்றிணைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக உள்ளார்.

இந்த நிறுவனத்தில் அடையாளம் தெரியாத நிர்வாகிகளும், அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

எனினும், க்ரோவரின் மனைவியும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான இந்திரா ஜெய்சிங்கின் பெயர் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

ஆனால், உள்துறை அமைச்சகம் கொடுத்த புகாரில் இந்திரா ஜெய்சிங் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

கடந்த 2009-2014-ம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து ரூ.96.60 லட்சம் பெற்றுள்ளார். அவரது வெளிநாட்டு பயணத்துக்கும் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவர் ஒப்புதல் பெறவில்லை.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு மத்திய அரசு தொகுப்பு ஊதியம் வழங்குகிறது. முக்கிய பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கக் கூடிய பொறுப்பில் இருக்கிறார்.

அத்தகைய பொறுப்பில் இருந்தவர் வெளிநாட்டு நிதி பெறுவதில் விதிமுறையை மீறியிருக்கிறார் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.