திருநெல்வேலி

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் மர்ம மரணம் குறித்த விசாரணைக்காக 30 க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 2 ஆம் தேதி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் காணாமல் போனதாக அவரின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 4 ஆம் தேதி திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.

இது நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  காவல்துறையினர் இதை சந்தேக மரணபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆயினும் வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிசிஐடி காவல்துறையினர் ,முதற்கட்டமாக அவர் இறந்துகிடந்த இடத்திலிருந்து விசாரணையை துவங்கி  ஜெயக்குமாரின் குடும்பத்தாரிடம் விசாரணையை முடித்துள்ளனர்.  தற்போது அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நண்பர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது