சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் முதல்வர் மற்றும் ஆசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது. இந்த விவகாரத்தில் காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால், 4வதுநாளன 17ந்தேதி அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளி கட்டிடமும் தீ வைக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
இந்த விவகாரத்தில் லோக்கல் காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை எஸ்பி, மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளி செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய 5 பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு விசாரணையின்போது, எத்தனை நாள் காவலில் விசாரிக்க அனுமதி கிடைக்கும் என தெரியவரும்.
எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….