சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையாளர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்களா. திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற வன்முறை, இதுதொடர்பாக திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைதுகள் நடைபெற்றுள்ளது. சிபிசிஐடி உள்பட பல்வேறு குழுக்களும் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார் அதில் , ‘திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.

தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? இதில் சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே!

மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல. மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக திமுக அரசு விளங்கியுள்ளது.’

என பதிவிட்டுள்ளார்.