தருமபுரி: கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 16,000 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 6வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சினையில், கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி கர்நாடக அணைகளிலிருந்து கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த 8 நாட்களாக, படிப்படியழகு நீர்திறப்பு அதிகரித்து வருகிறது.
முதற்கட்டமாக வினாடிக்கு 5ஆயிரம் கன அடி திறந்துவிட்ட கர்நாடக அரசு, பின்னர் அதை 10,000 கன அடியாக அதிகரித்து. அதைத்தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல்லில் 10,000 கன அடி வீதமும் 15,000 10,000 கன அடி வீதமும் கடந்த 18ந்தேதி நிலவரப்படி சுமார் 15ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழக எல்லையான பீலிகுண்டுவுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், தற்போது 16ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் தொடர்ந்து 6வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.140 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 21.20 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.50 அடியாக இருந்தது. அதனை தொடர்ந்து பெருமளவு நீர்வரத்து இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துகொண்டே வந்தது குறிப்பிடத்தக்கது.