சென்னை: லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது. பின்னர் அது போலி என்பது கண்டு பிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த குமரி மாவட்ட நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னையில் உள்ள செட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மர்மநபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். இதனால், காவல்துறையினர் பரபரப்பு அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். இதனால் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது. இதற்கிடையில்,  மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியும் நடைபெற்றது. அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மணிகண்டன் என்பது தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.  மனநலம்  பாதிக்கப்பட்ட மணிகண்டன் பலமுறை வெடி குண்டு மிரட்டல் புகாரில் கைதானவர் என்றும் கூறப்படுகிறது.