டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டுபிடித்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு மதிக்க மறுக்கிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசுமீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு தலைமைநீதிபதி சந்திரசூடு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரானக மூத்த வழக்கறிஞர்  முகுல் ரோத்தகி, கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில், காவிரி ஆணையத்தின் உத்தரவை மதிப்பதில்லை என்றும், இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என வலியுறுத்தியதுடன், தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவிக்க வேண்டும் என கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க புதிய அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதி தெரிவித்துள்ளார். 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை இன்றே அமைப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.