சென்னை: காவிரி நீர் விவகாரத்தில், தமிழ்நாடு அரசை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 6ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே விஸ்பரூபம் எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் பேச திமுக அரசு மறுத்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது முதல், அங்கு காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்றதுவரை அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச தயக்கம் காட்டி வருகிறார். மத்தியஅரசையும் உச்சநீதிமன்றத்தை நாடி வருகிறார்.

காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மாநில அரசு, அதை ஏற்க மறுத்து வரகிறது. மேலும், கர்நாடக கட்சிகள், விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசு, முறையான நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும்  வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரம் உள்ளிட்ட வருவாய் மாவட்டங்களில் வரும் 6ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தண்ணீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசிடம் தண்ணீரை பெற முயற்சி மேற்கொள்ளாத திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மேலும், குறுவை சாகுபடி பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.