சென்னை: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இளைய தலைமுறையினரிடையே பிரபலமானவர் யுடியூபர் டிடிஎஃப் வாசன். Twin throttlers எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலனதுடன்,  இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.   மேலும்,  அவ்வப்போது பைக் ஓட்டும் வீடியோக்களை தனது சேனலில் பதிவிட்டு வருகிறார். இவரது வலைதளத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால், இவரது சாகசமும், அதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. பல முறை காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டவர்.

இந்த நிலையில்தான்,  கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே வீலிங்  செய்ய முயன்றபோது விபத்துக்குள்ளானார்.  சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவர்மீது  5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து டிடிஎஃப்  வாசன் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து,  3 வது முறையும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசன்  இன்று ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இதையடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.