பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவும் ,  கர்நாடக மாநில அரசு தினசரி 5ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ள நிலையில், அதை ஏற்க மறுத்துள்ள கர்நாடக மாநிலத்தை ஆளும் காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார், காவிரி தொடர்பான இன்று அவசர அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆன அரசு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக அரசு நடைபெற்று வருகிறது. இந்த இரு அரசுகளும் காவிரி விவகாரத்தை பேசி சமூகமாக கொண்டு செல்லலாம். ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு காவிரி விவகாரத்தில் முரண்டு பிடித்து வருகிறது. தமிழ்நாடு அரசோ, கர்நாடக மாநில அரசிடம்  தனது கவுரம் கருதி பேசாமல் நீதிமன்றத்தை நாடி உள்ளது. இதனால், குறுவை சாகுபடிகள் காய்ந்து சருகமாறி வருகின்றன. விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஐஎன்டிஐஏ  கூட்டணியில் உள்ள திமுக அரசு தமிழக மக்கள் தேவைக்கான குடிநீர் கூட பெற்றுத்தர முடியாத அரசாக இந்த கூட்டணியில் எதற்கு உள்ளது என கேள்வி எழுகின்றது.

இதற்கிடையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரிய தமிழகஅரசின் மனு,  செப்டம்பர் 21ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம், நேற்று (11ந்தேதி) காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை தமிழ்நாட்டுக்கு கர்நாடக மாநில அரசு தினசரி 5ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், துணை முதலமைச்சருமான  டி.கே சிவக்குமார்,  காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது. தற்போது அணையில் உள்ள நீர் கர்நாடகா மக்களின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை என மீண்டும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காவிரி விவகாரம் குறித்து ஆலோசனைக்க  கர்நாடக அரசு சார்பில் இன்று  சிறப்பு அவசர கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.. கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் நண்பகல் 12.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மூத்த அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.