காவிரி தீர்ப்பு: 23-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு

Must read

சென்னை :

காவிரி நதி நீர் விவகார உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி நதி நீர் விவகாரம் குறித்த வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் எடப்பாடிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால், தமிழக அரசு சார்பில் இதுவரை பதில் ஏதும் வராத நிலையில், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 16ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில்  காவிரி நதியை உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்றும், காவிரி நீரை எந்த மாநிலமும் தனியாக உரிமை கோர முடியாது, நதி நீர் என்பது தேசிய சொத்து என்று தெரிவித்த  உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி தண்ணீரை   177.25 டி.எம்.சியாக குறைத்துவிட்டது.

இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

அன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும்,  இந்த கூட்டத்திற்கு ஆளும் கட்சிகளான அதிமுக மற்றும் பா.ஜ.,வுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று திமுக தலைவர் கலைஞரை கமல் சந்தித்தபோது, அவரையும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது..

More articles

Latest article