டில்லி

காவிரி நீர் ஒழுங்காற்றுக குழு கர்நாடகா நாளை முதல் தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் உத்தரவுகளைப் பின்பற்றி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுவது இல்லை. கர்நாடகாவில் மழையில்லை, தண்ணீர் இல்லை எனத் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

காவிரி நதி நீரை தமி ழகத்துக்குத் திறந்து விடுவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.  அங்குள்ள கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பை எதிர்த்துத் தொடர்ந்து பந்த் போராட்டங்களும் நடத்தினர். தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படும் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையையும் முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த மாதம் 30 ஆம்  தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் மாதம் 22 ஆம்ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை திறக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டதற்குக் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆயினும் வேறு வழியின்றி அந்த தண்ணீரைக் கர்நாடகா தமிழகத்துக்குத் திறந்து விட்டது.

இன்று டில்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 90 ஆவது கூட்டம் நடைபெற்றது.  கூட்டம் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு டில்லியில் தொடங்கியது. இதில் காணொலி மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் கர்நாடகா நிலுவையில் உள்ள தண்ணீரைத் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை என்பது ஓரளவு பெய்து வருவதால் தண்ணீர் திறப்பதில் அவர்களுக்குச் சிக்கல் இருக்காது.

 கர்நாடகா திறந்து விடும் தண்ணீரை மேட்டூர் அணையில் சேமித்து வைக்கவும் முடியும்.  மேட்டூர் அணையில் 23 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. இதனால் எனவே கர்நாடகா திறக்கும் தண்ணீரை முழுமையாகச் சேமிக்க முடியும் என கூறப்பட்டது.

காவிரி நீர் ஒழுங்காற்று குழு  நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழகத்துக்குத் தினமும் 2,700 கனஅடி நீரை கர்நாடகா திறக்க பரிந்துரை செய்யப்படுகிறது எனக் கூறி உள்ளது.   இதனால் நாளை முதல் கர்நாடகா தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.