காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மறுப்பு – தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

Must read

டெல்லி: இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மறுப்பு  தெரிவித்துள்ள ஆணையத்தலைவர்,  தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவை தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டு உள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வரும் கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ந்தேதி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  4 மாநிலத்தின் நதி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் விதமாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, மத்தியஅரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு என 2 ஆக பிரித்து தனித்தனியாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அவ்வப்போது கூட்டம் நடத்தப்பட்டு, காவிரி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி நடைபெற்ற நிலையில், 14வது கூட்டம் இன்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இன்றைய கூட்டம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்றது.

இந்த  கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய தமிழகஅரசு அதிகாரிகளி, ஆணையம் உத்தரவிட்டபடி, கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை  முன் வைத்தனர். மேலும், செப்டம்பர் மாதத்திற்கான 28 டி.எம்.சி தண்ணீரையும் அக்டோபர் மாதத்திற்கான 20 டி.எம்.சி தண்ணீரையும் சேர்த்து,  மொத்தம் 48 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது கர்நாடக அதிகாரிகள் தரப்பில் மேகதாது ஆணை குறித்து விவாதிக்க வலியிறுத்தப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த ஆணையத்தலைவர், மேகதாது அமைக்க தமிழகம் உள்ளிட்ட கீழ் பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் கர்நாடக அரசு அணை அமைக்க அனுமதி கோரும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறியதுடன், இந்த விஷயத்தில்  அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வந்தால் மட்டுமே மேகதாது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

மேலும்,  செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article