மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், இன்று முதன்முறையாக ஓய்வுபெற்ற  நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற  தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி பங்கேற்றார்.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை தொடங்கி 17 ஆண்டுகள் ஆகின்றது. இருப்பினும் இதுவரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது இல்லை. ஓய்வு பெறும் நீதிபகள் கடைசிநாளன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியுடன் இணைந்து வழக்கை விசாரிப்பதும், அதைத் தொடர்ந்தே பிரிவுபராக விழா நடைபெறுவதும் வழக்கம்.

ஆனால், இன்று முதன்முறையாக  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு இன்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.  அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய  அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  நீதிபதி கிருஷ்ணவள்ளி நெல்லையைச் சேர்ந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். 31.1.1985-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். வழக்கறிஞர் மங்கள எஸ்.ஜவஹர்லாலிடம் ஜூனியராக பணிபுரிந்தார். நீதித்துறை தேர்வில் வெற்றிப்பெற்று 1991-ல் திருச்சி 2வது கூடுதல் மாவட்ட முன்சீப்பாக நியமிக்கப்பட்டார். 26 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிந்த நிலையில், 2017 டிசம்பர் 1-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு உயர் நீதிமன்ற பணியில் இதுவரை 10207 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். தனி விசாரணையில் 5226 வழக்குகளிலும், அமர்வு விசாரணையில் 4981 வழக்குகளிலும் தீர்ப்பளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

ஏற்புரையில் பேசிய நீதிபதி கிருஷ்ணவள்ளி, தன்னை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்த பெற்றோர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில்,  நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி மற்றும் நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மேலும் பல சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காணொளி காட்சி வழியாக பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.