சென்னை:
 காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு 192 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும். ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது.
vivaayk
மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் சூழ்நிலை உருவாகும். ஆனால் தற்போது மேட்டூரில் 71 அடி தண்ணீரே உள்ளது. இதனால் அணையை திறக்க வாய்ப்பில்லை. சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசு தர வேண்டிய 50 டி.எம்.சி தண்ணீரை கேட்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இதனை சட்டப்படியாக சந்திக்க உள்ளதாகவும், தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் தர முடியாத நிலை உள்ளதாகவும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். அவரது பேச்சு டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
viva
தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீரை பெற மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஓழுங்கு முறை குழு ஆகியவற்றை உடனே அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது.
இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா. முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடை பெற்றன.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலும், 100 இடங்களில் ரெயில் மறியலும் நடைபெற்றது. சென்னையிலும் இன்று 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
vivasaikal
தஞ்சை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைத்து கட்சியினர் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவிரி நீர் விவகாரத்தில் தடையை மீறி விவசாயிகள், அனைத்து கட்சியினர் ரயிலை மறிக்க முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எழும்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் சேகர்பாபு தலைமையில் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவு பகுதிகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முடியவில்லை.ரெயில் நிலைய பிரதான வாசல் பகுதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
vivaayk2
மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 300 விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், ஆம்ஆத்மி போன்ற அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நிர்வாகிகள் சுபாஷ் சந்திரபோஸ், விஜய குமார், மகேஷ்குமார், ஜி.கே.எம்.காலனி ரித்திக் உள்ளிட்ட பலர் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமையில் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், சிரஞ்சீவி, கவுன்சிலர் தமிழ் செல்வன், சூளை ராசேந்திரன், ஐஸ்அவுஸ் தியாகு, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
குமரிஅனந்தன் கூறுகையில், காவிரி பிரச்சனையில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும். இதுபற்றி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
தாம்பரம் ரெயில் நிலையத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மாநில அமைப்பு செயலாளர் யாகூப், மாநில இளைஞர் அணி செயலாளர் ஷேக் முகமதுஅலி, காங்கிரஸ் காஞ்சி மாவட்ட தலைவர் சிவராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், தொகுதி செயலாளர் ரஞ்சன், நகர செயலாளர் சாமுவேல் பங்கேற்றனர்.
திராவிட கழக மாவட்ட தலைவர் முத்தையன், தி.மு.க. கலை இலக்கிய மாவட்ட செயலாளர் ஆதிமாறன், இந்திரன், ஜோதிக்குமார், வா.கா.ரவி, செல்வக்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் காமராஜ் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் 1-வது நடை மேடையில் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜவாஹிருல்லா உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.