புதுடெல்லி:
ஜிஎஸ்டி துணை மசோதாக்களை நிறைவேற்ற வசதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே கூட்ட மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை அமல்படுத்த வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி. மசோதாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிகை எடுத்து உள்ளது.  இந்த சட்டம் அமல் படுத்துவதற்கு குறைந்தது 15 மாநில அரசுகள், இந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் நிறைவேற்றியாக வேண்டும். அதன்பிறகே ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்படும்.
gst-
இதைத்தொடர்ந்து திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவை அசாம், பீகார், குஜராத், டெல்லி, தெலங்கானா, உள்ளிட்ட 9 மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி உள்ளன. மற்ற மாநிலங்களிலும் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. மசோதா தொடர்பான  மேலும் 2 துணை மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட  இருக்கிறது. இதற்கு வசதியாக பாராளு மன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை முன் கூட்டியே நடத்த மத்தியஅரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
அடுத்த மாதம் 9 அல்லது 10-ந்தேதி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மத்தியஅரசு அதிகாரிகள் கூறுகையில், “குளிர் கால கூட்டத் தொடரை முன்கூட்டியே நடத்துவதால் துணை மசோதாக்களை நவம்பர் மாதமோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ நிறைவேற்றிட முடியும்.
இதற்கிடையில் பல்வேறு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி. மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி வருகின்றன. எனவே பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
மாநிலங்களில் இந்த மசோதா நிறைவேற்றிய பின்பு ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்படும். இந்த கவுன்சில்தான் வரி விதிப்புகளை முடிவு செய்யும். இது தொடர்பான கருத்து வேறுபாடுகளையும் களைந்து முடிவு எடுக்கும்.