டில்லி,

காவிரி நதிநீர் பங்கீடு  வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 11–ந் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘‘காவிரி வழக்கில் தொடர்புடைய அனைத்து மாநில விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எட்ட வேண்டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த பிரச்சினையில் அனைத்து தரப்பினரின் வாதத்தையும் பரிசீலிக்க வேண்டும்.

இதே போல மத்திய நீர் ஆணையம், நிபுணர் குழு, நீர்வளத்துறை ஆகியவற்றின் கருத்தை கேட்க வேண்டும். எனவே, இவ்வழக்கு 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.