பாப்பாரப்பட்டி

நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் விவசாய வேலை பார்க்கும் பெண்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.

நேற்று மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.  இதில் பங்கேற்க நேற்று காலை விமானம் மூலம் முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை வந்தார்.  அவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.  அதன் பிறகு அவர் கிராம சபைக் கூட்டத்துக்குக் கிளம்பிச் சென்றார்.  திமுகவினர் யாரும் கிராம் சபைக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வரக்  கூடாது என அவர் கண்டிப்பாகத் தெரிவித்தார்.

அவருடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தனிச் செயலர் உதயசந்திரன், ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் சென்றனர்.  அந்த பகுதியில் சில வாரங்களாக பரவலாக  மழை பெய்ததால் அங்கு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.   முதல்வர் வரும் வழியில் வயல்வெளிகளில் பல பெண்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை கண்ட ஸ்டாலின் காரை விட்டு இறங்கி அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.  முதல்வர் அவர்களிடம், ‘என்னை உங்களுக்குத் தெரியுமா? ’ என்று கேட்டார். அந்தப் பெண்கள், ‘என்ன சார், இப்படி கேட்டுட்டீங்க. நீங்கத்தானே எங்களுடைய முதல்வர்’ என்றனர். ‘சந்தோஷம்’ என்ற முதல்வர், தொடர்ந்து அவர்களிடம் ‘ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா’ என்று கேட்டார்.

அப்பெண்கள், ‘ஆம் எங்களுக்கு வீடே இல்லை, மாடுகளை வைத்துப் பிழைக்கிறோம்.   எங்களுக்கு இன்றைக்கு வரை மாட்டுத் தொழுவம்தான் வீடு என்பதால் மழை, வெயிலில் கஷ்டப்படுகிறோம். அதிகாரிகள் எந்த வசதிகளையும் செய்து தரவில்லை.  அவர்களிடம் இது பற்றிச் சொன்னால்  தட்டிக் கழிக்கிறார்கள்.  நாங்கள் கொசுக்கடியில் கிடப்பதால் நிம்மதியாகப் பிள்ளை குட்டிகளோடு தூங்க ஒரு இடம் இருந்தாலே போதுமானது. எங்களுக்குச் சொத்து, சுகம் ஒன்றும் வேண்டாம்.  நாங்கள் கஞ்சி குடித்தாவது பிழைத்துக் கொள்வோம்’ என்று கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் அவர்களுடைய பஞ்சாயத்துத் தலைவர் பெயரைக் கேட்டு அவர் பெயர் திருப்பதி என்பதை அறிந்தார்.  பிறகு  அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, அந்தப் பெண்களின் கோரிக்கைகளைக் குறிப்பெடுக்க அறிவுறுத்திய முதல்வரைப் பார்த்துப் பேசிய மகிழ்ச்சியில் அப்பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.