டில்லி:

ரொக்க பற்றாகுறை நிலவுவதால் பீகார், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் குறிப்பிட்ட சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 3 மாவட்டங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத நிலை நீடிக்கிறது. தர்பங்கா, கயா, பகல்பூர் ஆகிய மாவட்டங்களில் ரொக்கத்துக்கு தட்டுப்பபடு ஏற்பட்டுள்ளது. தர்பங்கா நகரில் அனைத்து முக்கிய வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் இதே நிலை நீடிக்கிறது.

வங்கிகளில் பணம் எடுக்க சென்றால் செக்புக் எடுத்து வர மேலாளர்கள் வற்புறுத்துகின்றனர். இதனால் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு தான் பணம் எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள என்று மக்கள் புலம்பும் நிலை உருவாகியுள்ளது.

கயாவில் பணம் எடுப்பதே முழு பணியாக இருக்கிறது என்று தனியார் நிறுவன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பகல்பூரில் ரொக்க தட்டுப்பாடு காரணமாக 35 சதவீத தொழில்கள் முடங்கிவிட்டது என்று சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ போதுமான உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை அனுப்ப மறுக்கிறது. இதனால் ரொக்க பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்.களில் 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அடுக்கப்படுகிறது. இதுவும் விரைந்து தீர்ந்துவிடுகிறது என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தெலங்கானாவில் 2,200 எஸ்பிஐ ஏடிஎம்.கள் உள்ளது. இதில் 1,500 ஏடிஎம்.களை வங்கி பராமரிக்கிறது. 700ஐ தனியார் அமைப்புகள் பராமரிக்கிறது. இதற்கான பணம் முழவதையும் வங்கி தான் வழங்கி வருகிறது. இதில் 1,500 ஏடிஎம்.கள் மட்டுமே இயங்குகிறது.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களின் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காண முடிகிறது. வங்கிகளில் நேரடியாக பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வெளிவரும் வங்கி கடன் மோசடி சம்பவங்களால் வங்கி நடைமுறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவிலும் ரொக்க தட்டுப்பாடு காரணமாக ஏ.டி.எம்.கள் பல மூடி கிடக்கின்றன. செயல்படும் ஏடிஎம்.களிலும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர். ஐதராபாத், விசாகப்பட்டிணம், விஜயவாடா மற்றும் இரு மாநிலங்களில் கிராமப் புறங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது எத்தகைய நிலை இருந்தேதோ?, அதேபோன்ற நிலை தற்போது நீடிப்பதாக 3 மாநில மக்களும் தெரிவித்துள்ளனர்.