சென்னை

திமுக எம்பி டி ஆர் பாலு தன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி உள்ளார்

நேற்று சென்னை பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

டி.ஆர்.பாலு தனது உரையில்,

“தமிழக முதல்வர் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்துக்கொண்டு தமிழக மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை முறைப்படி யாருக்கும் அச்சப்படாமல் தொடர்ந்து ஆற்றி வருகிறார். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா துவக்கமாக அரசு சார்பில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, மதுரையில் மிகப்பெரிய நூலகம், அழகிய கலை நயத்துடன் கூடிய மணிமண்டபம் என்று பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுடன் ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாம் 10 ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்துள்ளதாக என் மீது அவதூறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  நான் தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த சொத்து பட்டியல் குறித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் உள்ளது. இதை தவிர கூடுதலாக ஒரு சென்ட் இடம்கூட என்னிடம் இல்லை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தில்லு இருந்தால் நேரடியாகக் களத்தில் சந்திக்கவேண்டும். இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பிவரும் அண்ணாமலை மீது வழக்குத் தொடுக்கப்படும்.

என்னைப் பற்றி தகவல் வெளியிட்டதற்கு, விளக்கம் கேட்டு முதலில் 48 மணி நேரம் கெடு கொடுத்து அண்ணாமலைக்கு நோட்டீஸ் வழங்கினோம். அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.  ஆகவே வரும் 8ம் தேதி அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முதலில் குற்றவியல் வழக்கும், அதைத்தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன்.  அந்த அவதூறு செய்தியில் 21 நிறுவனங்கள் எனக்குச் சொந்தமானது என கூறியுள்ளார். அதில், 3 நிறுவனங்களில் மட்டும்தான் பங்குகள் வாங்கியுள்ளேன். வேறு எந்த நிறுவனத்திலும் நான் தலைமை பொறுப்பு உள்ளிட்ட எந்த முக்கிய பொறுப்பும் வகிக்கவில்லை.”

எனக் கூறியுள்ளார்.