சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4ம் தேதி விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜூன் 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படியான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. மேலும், கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து செயற்குழு ஒப்புதல் வழங்கி தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டதுடன், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

அத்துடன், நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நீதிபதிகளின் உத்தரவை மீறியதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,   ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 4-ம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.