மதுரை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கும் நடைமுறை ஆபத்தானது என மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணிகளில் 13,331 காலியிடங்கள் நிலவுகின்றன. இவற்றை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை கொண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.

ஏற்னவே டெட் தேர்வு எழுதி ஏராளமானோர் பணிக்காக காத்திருக்கும் நிலையில், தமிழகஅரசு ஒப்பந்த அடிப்படையில், குறைந்த சம்பளத்தில்  காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட செயல் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், தமிழகஅரசு அறிவித்துள்ள தற்காலிக பணி நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்களுக்கு பணி வழங்க உத்தரவிடம் வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரின் வாதங்களை கேட்ட நீதிபதி ரமேஷ்  அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று கூறியதுடன்,  மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த நேரிடும் என்று கருத்து தெரிவித்ததுடன், தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க  உத்திரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.