சென்னை: திமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டு உள்ளதாக, தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஓபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினர் முன்னிலையில், பாதுகாப்பு இருந்த எடப்பாடி ஆதரவாளர் களை தாக்கி விரட்டியடித்து விட்டு, அங்கு பூட்டப்பட்டிருந்தஅறையின் பூட்டை கடப்பாறையை கொண்டு உடைத்தும், அங்கிருந்த ஆவணங்களை தனது வண்டியில் ஏற்றியும் சென்றார். அதன்பின்னரே, காவல்துறையினர் தடியடி நடத்தி சிலரை கைது செய்தனர். மேலும் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினரை கடுமையாக சாடியதுடன், சீலை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், இந்த வன்முறை தொடர்பாக ஓபிஎஸ் மீது வழக்கு ஏதும் பதியாமல் காவல்துறை இருந்தது.

இதுதொடர்பாக அதிமுக எம்.பி.யும், இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி.சண்மும்,  ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் பதியப்படாத நிலையில், நீதிமன்றத்தை நாடினார்.  அவரது மனுவில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட  சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்று அறைகளை திறந்து பார்த்தபோது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 11ந்தேதி அதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி  புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச்சென்றது தெரியவந்தாகவும்,

இதுதொடர்பாக மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராஜம் அளித்த புகாரைப் பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகைச்சீட்டு கூட வழங்க வில்லை எனவும், உயர் அலுவலர்களைத்தொடர்பு கொண்ட பிறகே புகாரைப் பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல் துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று (ஆக.25) விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.

இதைப்பதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலக வன்முறை தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல்துறை ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.