சென்னை: சென்னையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஆலந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந் நிலையில் பரங்கிமலை, நசரத்புரம் பகுதியில் பா.வளர்மதியின் மகன் மூவேந்தர் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

அப்போது, அவர்களை திமுகவினர், விரட்டிச் செல்ல மூவேந்தரும் உடன் வந்த சிலரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர். கார்த்திகேயன் என்பவரை பிடித்த திமுகவினர், அவரை காவல்துறையிடமும், அவர்களிடமிருந்து பறித்த 15 ஆயிரம் ரூபாயை தேர்தல் அலுவலரிடமும் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக பா.வளர்மதியின் மகன் மூவேந்தர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக அதிமுகவினர் அளித்த புகாரில், திமுகவைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.