சென்னை
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்ருகையிட முயன்றதாக 870 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து இழிவாகவும், அவதூறாகவும், ஆதாரம் இல்லாமல் பேசி வருவதாக கூறி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் போராட்ட்த்தில் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி, சீமானின் சென்னை நீலாங்கரை இல்லத்துக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போராட்டத்தில் சீமானின் உருவப்படத்தை துடைப்பத்தாலும், செருப்பாலும் அடித்தும், செருப்பு மாலை அணிந்தும், ஒப்பாரி வைத்தும் தங்களுடைய எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். அவருடைய உருவபொம்மையை எரித்ததால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
எனவேபோலீசார் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலை சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காட்சியளித்தது. கைது செய்யப்பட்ட 875 பேரை போலீசார் நேற்று மாலை விடுவித்தனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருமுருகன் காந்தி, கோவை ராமகிருஷ்ணன் உட்பட 870 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.