சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில், இந்த இடஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படமா? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இன்று பிற்பகலே பதில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுஉள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பாஜக தேர்தல் உடன்பாடு காரணமாக இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து, பசும்பொன் மக்கள் கழகம், தென்னாடு மக்கள் கட்சி உள்பட பல்வேறு சமூக அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. மனுவில், அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, வகுப்புவாரி இடஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், சாதிவாரி இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுகவும், வன்னியர் இடஒதுக்கீட்டை ஏற்று 26-07-21 அன்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ், வேல்முருகன் உள்பட பலர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து தாங்கள் தொடர்ந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை அமர்வில் முறையிடப்பட்டது. ஏற்கனவே ஆகஸ்டில் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை காரணமாக, உடனே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அmப்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிறபகல் வழக்கை விசாரிப்பதாக சொன்ன நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறித்து பிற்பகல் 2:15க்கு விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.