சென்னை: அமைச்சர் வேலுவுக்கு தொடர்புடைய பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற வருவமான வரித்துறை சோதனையில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
அதன்படி, காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில், கணக்கில் வராத ரூ.600 கோடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், ரொக்கமாகச் சிக்கிய ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வருகிறு. இந்த நிறுவனத்தில் நவம்பர் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். மேலும், இத்துடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பு உள்ள இடங்களிலும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவான்மியூரில் இருக்கும் காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகள் என பல இடங்களில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் மட்டும் பத்துக்கும் அதிகமான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அங்குள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ரூ.4 கோடி பணமும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மூலம் ரூ.250 கோடி கண்ணில் வராதது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தகவல் கிடைத்துள்ளது.