தர்மசாலா
கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய விடாது பெய்த மழையால் தர்மசாலா நகரில் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் உள்ள வடிகால் ல் வெள்ளம் அதிகரித்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
இந்த காடும் வெள்ளத்தில் ஏராளமான இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வானிலை மிகவும் மோசமாக உள்ளதாலும் கனமழையாலும் தர்மசாலா விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிருந்து எந்த விமானமும் கிளம்பவில்லை.
மஞ்சிகி கட் பகுதியில் இரு கட்டிடங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான கட்டிடங்கள் கடும் சேதமடைந்துள்ளன. மண்டி – பதன்கோட் நெடுஞ்சாலை பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்னும் அச்சத்தால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது தர்மசாலாவில் தங்கி உள்ள சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கவும் வெளியே செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.