பாட்னா

மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சை நிறுத்தி விட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும் என பீகார்  மாநில எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

 

கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் என  இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் பாஜக தலைவர்கள் இந்த நடவடிக்கையைப் புகழ்ந்து வருகின்றனர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காஷ்மீர் மாநிலம்  என்றும் இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். நான் காஷ்மீர் எனச் சொன்னது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார். அதே கருத்தைப் பல பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் தனது டிவிட்டரில் “ஜெய் காஷ்மீர், ஜெய் பாரத், இதற்குப் பிறகு அனைத்தையும் கைப்பற்றுவோம்” எனப் பதிந்தார்.

அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த இந்த கருத்துக்கு பீகார் மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பிரேம்சந்த் மிஸ்ரா,  “கிரிராஜ் சிங் மக்களைத் திசை திருப்பும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து அறிக்கைகள் வெளியிடுகிறார். அவருக்குத் தைரியம் இருந்தால் அவரை தடுத்து நிறுத்துபவர்களை மீறி மத்திய அரசிடம் பேசி எல்லையைத் தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜய் பிரகாஷ் யாதவ, “கிரிராஜ் சிங் தைரியம் உள்ளவராக இருந்தால் எல்லையைத் தாண்டிச் சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றட்டும். அதை விடுத்து வெறும் அறிக்கை அளிக்க வேண்டாம். இது போன்ற கொள்கை முடிவுகளை எந்த ஒரு தலைவரும் வெளிப்படையாகச் சொல்வது கிடையாது. இவர் செய்திகளில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகப் பேசுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள், “அமைச்சர் கிரிராஜ் சிங் எப்போதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவது குறித்து மட்டுமே பேசி வருகிறார்.அவர் பேசுவதானால் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது குறித்தும் பேச வேண்டும் ஆனால் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து வாய் திறப்பதில்லை. இதுவே அவரது அரசியல் நிலைப்பாடு” எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.