ஸ்ரீலங்கா,

பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு கடற்படையினரின் பாதுகாப்பு ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும் என இலங்கை வலியுறுத்தி உள்ளது. இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது, மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து கொழும்பில் நடைபெற்ற மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும், மீன்பிடிப்பது தொடர்பாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஏற்பதானால், பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு கடற்படையின் கூட்டு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என இலங்கை நிபந்தனை விதித்துள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பது இலங்கையின் நிபந்தனை.

ஆனால், இந்திய அதிகாரிகள் இந்த நிபந்தனையை முழுமையாக ஏற்க மறுத்ததால், இந்தப் பேச்சுவார்ததையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்டமாக இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் முடிந்தது தமிழக மீனவர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் வருகிற 25ம் தேதி தமிழக மீனவர்களை ஒன்றுதிரட்டி கச்சத்தீவு சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மீனவர் சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.