சென்னை: “சென்னையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகள் அகற்றுவதற்கான செலவுத்தொகை, உயர்நீதி மன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படும்” என சென்னை மாநகர ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை 34,571 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை மூன்றாம் கட்டமாக கணினி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை  குழுக்களின் வாகனங்களை ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 26.01.2022 மாலை 6.30 மணி முதல் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தேர்தல விதிகள் மற்றும், நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது  குறித்து,கடந்த மாதம் 29ந்தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும்  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போஸ்டர்கள், விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று விதிகளை மீறி எழுத்தப்பட்டுள்ள விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இதுநாள் வரை பொது இடங்களில் 1,831 சுவர் விளம்பரங்கள், 10,348 சுவரொட்டிகள், 104 பேனர்கள், 840 இதர விளம்பரங்கள் என மொத்தம் 13,123 விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 1,677 சுவர் விளம்பரங்கள், 18,453 சுவரொட்டிகள், 525 பேனர்கள், 793 இதர விளம்பரங்கள் என மொத்தம் 21,448 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் 34 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் கோவிட் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல் என மொத்தம் 69 வழக்குகள் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (Posters) மற்றும் வில்லைகளை (Stickers) அகற்றிடவும், சுவரொட்டிகளை அகற்றுதலுக்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து பெற்றிடவும், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மின் பெட்டிகள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை (Posters) அவர்களாகவே உடனடியாக அகற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959-ன் படி காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.