சென்னை: தமிழகம் உள்பட 3 மாநிலங்களின்  சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் 6,319 மனுங்ககள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.

தமிழகம் உள்பட 3 மாநில சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (19ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய  முதல் நாளில் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சனி, ஞாயிறு விடுமுறை 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,   முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் உள்பட ஏராளமானோர்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத்தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன்  முடிவடைந்த  நிலையில், நேற்று இரவு நிலவரப்படி,  தேர்தலில் போட்டியிட 5,532 ஆண்கள் , 968 பெண்கள் , மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என 6,503 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் .  கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஒரு பெண் உள்பட 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் .  தமிழகத்தில் 6,319 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.

ஆனால், நள்ளிரவு 11 மணி நிலவரப்படி 6,665 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக தேர்தல் ஆணையத்தின் வளைதளம் தெரிவித்தது.  இன்று காலை 7.30 மணி அளவிலான தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள  நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 7216 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில், வேட்பாளருக்கு ஆதரவாக மாற்று வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதை சேர்த்து, எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி ஒரே வேட்பாளரின்  விவரம்  இருமுறை பதிவாகி உள்ளது. இதனால், தேர்தல் ஆணையம் வலைதளத்தில் வெளியாகி உள்ள பட்டியல் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

வரும் 22 ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் . அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு , சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகாவது சரியான விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிடுமா என்று பார்க்கலாம்…