சென்னை: வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் எழுந்துள்ள அதிருப்தி காரணமாக,  மாநில  காங்கிரஸ் தலைமை அலுவலகமான  சத்தியமூர்த்தி பவனில் இரு கோஷ்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் பாரம்பரியம் மிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடும் இழுபறிக்கு பிறகு வெறும் 25 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை  தேர்வு செய்வதில் கட்சிக்குள் பிரளயமே நடந்து வருகிறது.

வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், திமுக உள்பட கூட்டணி கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரத்துக்கு சென்றுவிட்டன. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இன்னும் வேட்பாளர் பட்டியலே தயாராகவில்லை.

இந்த நிலையில்,  கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தர ஏற்பாடு நடைபெற்று வருவதாக,  காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தலைமையில் ஒரு கோஷ்டியினர், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக  போராட்டத்தில் குதித்துள்ளனர். முக்கிய நிர்வாகிகள் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து,  விஷ்ணு பிரசாத்துக்கு எதிராக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனால் சத்தியமூர்த்தி பவன் கலைகட்டி வருகிறது.