பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எருமைமாடு மீது அமர்ந்து வேட்பாளர்கள் பிரசாரம் செய்தும் ருசிகரமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வேட்புமனுத்தாக்கலின்போது சுயேச்சை வேட்பாளர் உள்பட 3 பேர் எருமை மாடுகளில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தது சர்ச்சையான நிலையில், தற்போது எருமை மாட்டில் அமர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்  எச்சரிக்கப்பட்டு,   ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிகாரில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கயா டவுனைச் சேர்ந்த ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் வேட்பாளர் முகமது பர்வேஸ் மன்சூரி (45) என்பவர் தனது பகுதியில் எருமையில் சவாரி செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவரை  விலங்குகள்  கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறியதாகவும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடப்பட்டார்.

இதுகுறித்து கூறிய, மன்சூர்,   என்னிடம் பிரசாரத்திற்கு செல்ல சொந்தமாக கார் இல்லை, ஒரு எருமை மட்டுமே உள்ளது. என்னால் வாடகைக்கு கார் எடுக்க முடியாததால் என்னிடம் உள்ள எருமை மீது ஏறி பிரசாரத்திற்கு வந்தேன் என தெரிவித்தார்.

அதுபோல, பீகாரின் பகதூர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் எருமை சவாரி செய்து வேட்புமனு தாக்கல் செய்ய தர்பங்கா வந்தார். அவரது ஆதரவாளர்கள் பின்தொடர்ந்தனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் நச்சாரி மண்டல் தன்னிடம் நான்கு சக்கர வாகனம் இல்லை, எனவே பீகார் தேர்தல் 2020 இல் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய தர்பங்காவை அடைய எருமை சவாரி செய்ய முடிவு செய்தாகவும்,  நான் ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன் அதனால்  எருமையில் வர முடிவு செய்தேன்” என்று தெரிவித்து உள்ளார்.