டெல்லி: ஜே.இ.இ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி போன்ற பிரபல பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில், ஜெஇஇ மெயின் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வும்  எழுதலாம். இந்த தேர்வுகள் மாநில மொழியில் இல்லாமல் இந்தி ஆங்கிலத்தில் இருப்பதால் தாய்மொழியில் படித்து வரும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாநில மொழிகளில் முக்கிய தேர்வுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வந்தது.
இந்த நிலையில்,  ஐஐடி, என்.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ மெயின் தேர்வுகளை கூடுதலாக அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ” அந்தந்த மாநில மொழிகளில் ஜே.இ.இ மெயின் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டு சேர்க்கை வாரியம் ( Joint Admission Board (JAB) எடுத்துள்ள முடிவின்படி இந்தியாவின் மேலும் பிராந்திய மொழிகளில் JEE (முதன்மை) தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.