சென்னை:
மிழக உள்ளாட்சி தேர்தலை அதிரடியாக ரத்து ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்ய உள்ளது.  இதற்கு திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து யூனியன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
TNEC2 high
இதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. சட்டப்பிரிவு சார்பில் ஆர்.எஸ்.பாரதி  தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு  உத்தரவிட்டது.
தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், புதிய தேர்தல் தேதியை அறிவித்து டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் ஏற்பாடுகளை முழுமையாக செய்து முடித்து வேட்புமனுக்களும் பெறப்பட்டு பரிசீலனையும் முடிந்த நிலையில் இப்போது திடீரென தேர்தலுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதால் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வது என்று தேர்தல் கமிஷனில் முடிவு எடுக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் அரசு மூத்த வக்கீல் குமார் அப்பீல் மனுவை இன்று பிற்பகலில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
இன்று காலையில் ஐகோர்ட்டில் புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் மதியம் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
அவசர வழக்காக இதை அனுமதித்து உடனே விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல்கள் வலியுறுத்த உள்ளனர்.
எனவே உள்ளாட்சி தேர்தல் இப்போது நடக்குமா? தள்ளி போகுமா? என்பது அப்போது தெரிந்து விடும்.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி இன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “உள்ளாட்சி தேர்தல் தடையை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்தால் அந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.