குண்டர் சட்டம் ரத்து: மயங்காத நீதி தேவர்க்கு வணக்கம்! கமல் டுவிட்

Must read

சென்னை,

மாணவி வளர்மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததற்கு நடிகர் கமலஹாசன் நீதிபதிகளுக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்.

வளர்மதி பவுர்ணமியாக வளரவும்,  மயங்காத நீதி தேவர்க்கு வணக்கம் என அவர் டுவிட் செய்துள்ளார்.

கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து,  போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு கடந்த  ஜூலை 12-ம் தேதியன்று சேலம் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தார்.

இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவி வளர்மதி, பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பிய நிலையில், வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார். அதில்,  அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு வழங்கப்பட்ட பேச்சுரிமையின்படி அவர் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்; அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க எந்த முகாந்திர மும் இல்லை’ என  வாதிடப்பட்டது.

இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.

சமீபகாலமாக அரசு மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமலஹாசன், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்துக்கும் தனது கருத்துக்களை டுவிட்டரில் கூறி உள்ளார்.

அதில்,  வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம் என்று கூறி உள்ளார்.

கமலஹாசனின் டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More articles

Latest article